குன்னூரில் மாதம் ஒரு கோடி கொரோனா டோஸ் நிரப்ப முடியும் கோவையில் புதிய ரேபிஸ் மருந்து உற்பத்தி நிறுவனம்-பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்

ஊட்டி : கோவை  பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் புதிய ரேபிஸ் மருந்து உற்பத்தி  நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. தற்போது நில பரிமாற்றத்துக்கான நடவடிக்கை  நடந்து வருகிறது என பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தெரிவித்தார். நீலகிரி  மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பார்க் பகுதியில் பாஸ்டியர் நிறுவனம் உள்ளது. இந்த  நிறுவனம் 1907ம் ஆண்டு வெறிநாய் கடி தடுப்பூசி உற்பத்திக்காக  தொடங்கப்பட்டது. தற்போது இங்கு ரேபிஸ் தடுப்பு மருந்து உற்பத்தி  செய்யப்படுவதில்லை.

2019ம் ஆண்டு ரூ.137 கோடி மதிப்பில் உற்பத்தி வசதிகள்  ஆய்வகங்கள் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம்  தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமல் ஆகிய 3 வகை நோய்களை  தடுப்பதற்கான டிபிடி எனப்படும் முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி சோதனை  முறையில் நடைபெற்று வருகிறது.  2023ம் ஆண்டு வாக்கில் தடுப்பு மருந்து  உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் என பாஸ்டியர் இயக்குநர் தெரிவித்தார்.

இது குறித்து குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார் கூறியதாவது: டிபிடி முத்தடுப்பூசி மருந்துகளின் சோதனை முறையிலான உற்பத்தி நடந்து  வருகிறது. இம்மருந்தின் மூலப்பொருட்களின் தரம் குறித்து உலக சுகாதார  நிறுவனம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் வணிக ரீதியாக விநியோகிக்க  உரிமம் வழங்கும். உரிமம் கிடைத்தவுடன் முத்தடுப்பூசி மருந்து  விநியோகிக்கப்படும். ஆண்டுக்கு 10 மில்லியன் டோஸ் முத்தடுப்பூசி மருந்துகள்  உற்பத்தி செய்யப்படும். வரும் 2023ம் ஆண்டு விநியோகம் தொடங்கும்.

இந்த  நிறுவனத்தில் ரேபீஸ் வெறிநாய்க்கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.  தற்போது தனியார் நிறுவனங்களில் இருந்துதான் ரேபிஸ் தடுப்பூசி மருந்து  கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவை பிரஸ் காலனி பகுதியில் 30  ஏக்கரில் புதிய ரேபிஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.  

தற்போது நில பரிமாற்றத்துக்கான நடவடிக்கை நடந்து வருகின்றன. 4  ஆண்டுகளில் ரேபிஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கும். இது தவிர குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நிரப்பவும், பேக்கிங் செய்யவும் ஒப்பதல் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும்  பட்சத்தில் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் நிரப்பும் பணி  தொடங்கும். மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்கள் நிரப்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: