ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 50 கழிவறைகள் கட்டப்படும்-கிராம சபா கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல்

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 50 கழிவறைகள் கட்டித்தரப்படும் என்று கிராம சபா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். வாலாஜா ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி, பாண்டியன், பாப்பாத்தி, ஜான், ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் சபரிகிரீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் பங்கேற்றார்.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், ‘பனை மரங்களை வெட்டும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. பெல் டவுன்ஷிப் பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. பெல் நிறுவன வளாகத்தில் மலைமேடு கிராமத்திற்கு வழி விட மறுக்கிறார்கள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வடகால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நரசிங்கபுரம் சாலை மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மலை மேடு பகுதிக்கு குடிநீர் வசதி, வீட்டுமனைப்பட்டா மற்றும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்’ என்றனர்.  

இதற்கு, வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ‘₹12,500 மதிப்பில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 50 கழிவறைகள் வாங்கி தருவோம். உங்கள் கோரிக்கைகளான குடிநீர், பட்டா, கழிவுநீர் கால்வாய் போன்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றி தரப்படும். பட்டா என்பது ஒரு குடும்பத்திற்கு ஒன்று தான் வழங்கப்படும்’ என்றார்.

இதில், விஏஓ வசந்தகுமார் மற்றும் கிராமமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுமதி ஏழுமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமிரி ஊராட்சி ஒன்றிய துணை பிடிஓ  ஜெயச்சந்திரன் பங்கேற்றார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வரும் 5 ஆண்டுகளுக்கான கிராம வளர்ச்சி குறித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.  கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம்  கூறப்பட்டது.

இதில், விஏஓ சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நெமிலி அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தில் காணாமல் போன கால்நடை மருத்துவமனை கண்டுபிடிக்க தர தீர்மானம்.நெமிலி: நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சணாமூர்த்தி  தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணகி தனசேகரன் வரவேற்றார். துணை  பிடிஓ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 2022-2023ம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் சாலை வசதி, புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், மழைநீர் கால்வாய்கள் அமைப்புகள், மழைக்காலங்களில் பாதித்த வீடுகள் மற்றும் சாலைகள் சீரமைப்பு, பள்ளி வளாகத்தில்  கழிப்பறை கட்டிடம் கட்டுதல், கூடுதல் நியாய விலை கடை  கட்டுதல் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, பொதுமக்கள்  கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இங்கு கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. தற்போது அந்த மருத்துவமனை எங்கே இருக்கிறது என தெரியவில்லை. இந்த கால்நடை மருத்துவமனையை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்றனர். இதில், பிடிஓ செல்வகுமார், விஏஓ கோபிநாத், செவிலியர் பேபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் சவுமியா நன்றி கூறினார்.

Related Stories: