ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், அந்த வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, கைகால், முகம் கழுவிய பின்தான் குழந்தையை தூக்க வேண்டும், முகத்தோடு முகம் வைத்து அதிகம் கொஞ்சக் கூடாது, எச்சில் படும்படி முத்தம் வைக்கக் கூடாது, இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்றாக கைக்குழந்தையை கையாளும் முறையை சொல்லலாம்.

அதாவது, தலை நிற்காத குழந்தையை போதிய விழிப்புணர்வு இல்லாமல் கையாளு வதாலும், முரட்டுத்தனமாக கொஞ்சுவதாலும் அக்குழந்தைக்கு மூளை சேதம் கூட ஏற்படக்கூடும் என்கிறது நம் மருத்துவம்.‘என்னது, குழந்தையை கொஞ்சுவதால் மூளை சேதமா..?’ என்றால், ‘ஆமாம்’ என்பதே பதில். இதனை மருத்துவத்தில் ‘ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ (Shaken Baby Syndrome) என்பார்கள்.

‘ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ என்பது?

‘ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ என்பது மூளை காயத்தை ஏற்படுத்தும் ஒரு தீவிர நிலை. அதாவது, குழந்தையை யாராவது மிகவும் கடினமாக அசைக்கும்போதோ, குலுக்கும் போதோ, தலையை தாங்கிப் பிடிக்காமல் தூக்கிக்கொண்டு நடக்கும்போதோ, கொஞ்சும்போதோ, தூக்கிப் போட்டு பிடிக்கும்போதோ குழந்தையின் மூளைக்கு சேதம் விளைவித்து ஆபத்தில் கொண்டு நிறுத்தும். அவ்வாறான சேதத்தை தான் ‘ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ என வரையறுக்கிறோம்.

குழந்தைகள் பிறந்தது தொடங்கி 4 முதல் 5 மாதம் வரை கழுத்தானது நிற்காது. அதாவது பிறந்த குழந்தையின் உடல் தசைகள் முழுவதும் வலிமை பெறாமல் இருக்கும். மூளையும் முழு வளர்ச்சி பெற்றிருக்காது. அதனால் குழந்தையானது தலையை உயர்த்திப் பார்க்கவும், தவழவும், நிற்கவும், நடக்கவும் பல மாதங்கள் ஆகக்கூடும். ஆகையால் குழந்தைகளை முரட்டுத்தனமாக கொஞ்சுதல், கடுமையாக கையாளுதல் போன்றவை ஆபத்தை விளைவிக்கும். அது, தற்காலிக பிரச்சினைகள் மட்டுமின்றி நிரந்தர குறைபாடுகளையும், சில சமயம் இறப்பும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இளம் குழந்தைகள் விஷயத்தில் அதீத கவனம் என்பது அவசியமாகிறது.குறிப்பாக சிறுவர்களிடம் குழந்தையை தருவதும், தூக்கிக் கொஞ்ச அனுமதிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதனை ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்து நடக்கவேண்டியது மிக மிக அவசியம்.

அன்றும்... இன்றும்...

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக இருந்த குழந்தைகள் மீதான இந்த வன்முறையும், விழிப்புணர்வின்மையும் சமீப காலங்களாக குறைந்து வருகிறது. அதாவது, ஓயாமல் அழும் குழந்தையால் பெற்றோர் கோபமுறல், காப்பாளரின் அலட்சியம், பச்சிளம் குழந்தைகள் மீதான அறிந்தும் / அறியாமலும் செய்யும் வன்முறைகள், சிறுவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் குழந்தையை அசைத்து அசைத்து விளையாடுவது போன்ற பல காரணிகள் இப்போது குறைந்துள்ளதே இதற்கான காரணம் எனலாம்.

எந்த வயது குழந்தைக்கு..?

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படலாம். அதிலும் முக்கியமாக 3 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த ஆபத்து மிக அதிக அளவில் ஏற்படலாம். தலை நின்றக் குழந்தையாக இருந்தாலும் கூட அதிகமான குலுக்கலால் அதிர்வு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். குறைந்த அளவில் மூளை சேதம் ஏற்பட்டால் அது அப்போதே வெளிப்படாமல் குழந்தை வளரும் போதே தெரியவரும் (மங்கலான பார்வை, தலைவலி, வலிப்பு போன்றவை தெரியப்படுத்தும்).

செய்யக்கூடாதவை..?

குழந்தையை குலுக்கிக் குலுக்கி மூர்க்கமாக கொஞ்சுதல், தூக்கிப் போட்டு கொஞ்சுதல்/ விளையாடுதல், கழுத்து நிற்காத பச்சிளம் குழந்தையை பொறுமையாக கையாளாமல் முரட்டுத்தனமாக உலுக்குதல், வண்டிகளில் பயணிக்கும்போது உண்டாகும் குலுங்கலில் குழந்தையின் தலை பாதுகாப்பாக இல்லாமல் இருப்பது, குழந்தைகளிடம் தூக்கக் கொடுப்பது போன்றவை கூடவே கூடாது. இதனால் இளம் குழந்தையானது எளிதில் பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது.

அவசியம் பின்பற்ற வேண்டியவை...

*சிறுவர்களிடம் குழந்தையை விளையாடக் கொடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை.

*இதுவரை பிறந்த குழந்தையை கையாளத் தெரியாத பெற்றோர்கள் போதியகையாளுதல் நுட்பங்களை கற்றுக் கொள்ளவேண்டும்.

*குழந்தை விடாமல் காரணமின்றி அழுதுகொண்டு இருந்தால் அதன் மீது கோபம் கொண்டு உலுக்கவோ, கீழே போடவோ கூடாது. (இம்மாதிரியான வன்முறைகள் இப்போது குறைந்து கொண்டு வருகிறது என்றாலும் 9 - 15 நொடிகள் உலுக்கினாலும் கூட குழந்தையின் மூளைக்கு பாதிப்பு ஏற்படும்).

*குழந்தையை பராமரிக்கும் நபர்களுக்கு போதிய விழிப்புணர்வு தேவை.

*குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, ஸ்பிரிங் பொருத்திய தூளியை பயன்படுத்தக் கூடாது. அதனாலும் அதிர்வு ஏற்படக்கூடும்.

என்னென்ன பாதிப்புகள்..?

உடனடி அறிகுறிகளாக குழந்தைகள் தொடர்ந்து அழுவது, வாந்தி எடுப்பது, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருக்கும். சில பாதிப்புகள் சில மாதங்களுக்குப் பிறகே வெளிப்படும். உலுக்குவதால் குழந்தையின் மூளை முன்னும் பின்னும் அதிர்வில் நகரும், அதனால் மூளைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, மூளையில் சிராய்ப்பு, ரத்தப்போக்கு மற்றும் வீக்கத்தைத் தூண்டும். ரத்தக் குழாய்கள் உடைந்து ரத்தக் கசிவு ஏற்படும். வலிப்பும் வரலாம். நிரந்தர பாதிப்பான மூளை வாதம் ஏற்படக்கூடும். மேலும், கண் பார்வைக் கோளாறுகள், பார்வைப் படலத்தில் ரத்தம் உறைந்து பார்வை வளர்ந்த பின் மங்கலாகத் தெரிவது, அறிவுத் திறன் குறைபாடு, பேச்சு திறன் தாமதம், கழுத்துப் பகுதியில் வரும் தண்டுவடம் பாதிப்பு, கேட்கும் திறன் குறைபாடு, குழந்தையின் மண்டை ஓடு முழு வளர்ச்சி பெறாமல் இருப்பதால் தலை எலும்புகளில் விரிசல் ஆகியவை கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இயன்முறை மருத்துவம்...

மூளை வாதம் (நிரந்தரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதிப்பு) ஏற்பட்டால் உடல் அசைவுகள் பாதிக்கக்கூடும். அதனால் குழந்தையால் உட்கார, நிற்க, நடக்க என எல்லாவற்றிலும் கடினம் ஏற்படும். அவற்றை பிரத்யேகப் பயிற்சிகள் மற்றும் நுட்பங்கள் மூலம் அசைவுகளை மேன்மைப் படுத்தவும், மேலும் மோசமாக ஆகாமல் பாதுகாக்கவும் இயன்முறை மருத்துவம் உதவும். எனவே குழந்தையை விளையாட்டாக கொஞ்சுவதும் விபரீதம் ஆகும். வன்முறையை கையாள்வதும் துன்பத்தில் முடியும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: