கடற்கரை கிராமங்களில் சுண்டைக்காய் சீசன் துவக்கம்-கிலோ ரூ.50க்கு விற்பனை

சாயல்குடி :  கடற்கரை கிராமங்களில் சுண்டைக்காய் சீசன் துவங்கியுள்ளது. மருத்துவ குணம் நிறைந்த காய் என்பதால் விற்பனை சூடு பிடித்துள்ளது. காய்கறிகளில் மிகவும் சிறிய காய் சுண்டைக்காய் ஆகும். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பது, கொழுப்பை கரைய செய்வது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் ஏ,சி.இ உள்ளிட்ட சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இருதய நோய், சர்க்கரை நோய், கண்பார்வை, நரம்பு கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றிற்கு சிறந்த மருந்துவ குணம் கொண்டதாக உள்ளது.

இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த சுண்டைக்காய் சாயல்குடி, தொண்டி, திருப்புல்லாணி, கீழக்கரை பகுதி கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரையோர மணல்களில் இயற்கையாக வளர்ந்து வருகிறது. தற்போது காய் சீசன் என்பதால் பெண்கள் பறித்து, கிராமங்கள் மற்றும் வாரச்சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து ஒப்பிலான், மாரியூர் பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘கத்தரி செடி, பூ போன்று காணப்படும் சுண்டைக்காய் செடி, பருவமழை காலமான ஜப்பசி மாதம் செழித்து வளரும்.

தை மாதம் வரை பூ, பூத்து காய் தரும். சற்று கசப்பு தன்மை வாய்ந்தது என்றாலும், மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சாப்பிட கூடிய உணவாகும். தற்போது உள்ள கொரோனாவிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி சுண்டைக்காயில் நிறைந்து காணப்படுவதால், அனைத்து பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுண்டைக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சக்கரை நோய், கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தை வைத்துள்ள பாலூட்டும் பெண்களுக்கு சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் கிராமங்களிலேயே நல்ல விற்பனை ஆகிறது.

பச்சையாக பறிக்கப்பட்ட சுண்டைக்காயை வதக்கியும், காய வைத்து வத்தலாகவும் பயன்படுப்படுகிறது. சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், து£த்துக்குடி பகுதி வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து பறிக்கச் சொல்லி வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு செடியில் வாரத்திற்கு சுமார் ஒரு கிலோ காய் பறிக்கலாம். 10 கிலோ காய் பறிப்பதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். கிராமங்கள் மற்றும் ராமநாதபுரம், முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட அனைத்து வாரச்சந்தைகளில் ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலும் படியில் அளந்து விற்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்’’ என்றனர்.

Related Stories:

More