சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 95 சதவீத ஏரிகள் நிரம்பியதால் உபரிநீரை திருப்பிவிட மாற்று ஏற்பாடு: நீர்வளத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் 95 சதவீத ஏரிகள் நிரம்பியதால், உபரிநீரை திருப்பி விட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 6ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள 1551 ஏரிகளில் 1523 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

குறிப்பாக, 28 ஏரிகளை கொண்ட சென்னை மாவட்டத்தில் 26 ஏரிகளும், 578 ஏரிகளை கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 479 ஏரிகளும், 564 ஏரிகளை கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 558 ஏரிகளும், 381 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 367 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதை தவிர்த்து 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 56 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 37 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 28 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மீதமுள்ள ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, நிரம்பிய ஏரிகளில் இருந்தும், மீதமுள்ள ஏரிகள் நிரம்பினால் மாற்று ஏற்பாடாக உபரிநீரை திருப்பி விட வேண்டியுள்ளது.

தற்போது, பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில் கரைகள் உடைந்ததால்தான் சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் புகுந்தது. எனவே, நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீரை தங்கு தடையின்றி வெளியேற்ற வசதியாக கால்வாய்களில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரைகள் உடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சில ஏரிகளில் இருந்து உபரிநீரை விடுவதற்கு வழியில்லாத நிலையில், அங்கு திறந்தவெளிப்பகுதியில் தண்ணீரை திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. காரணம், ஏரிகள் உடைந்தால் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதையும், பயிர்கள் நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் தற்போது பணிகள் நடந்து வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* படகில் சென்று கொசஸ்தலையாற்றில் உடைப்பு சீரமைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கொசஸ்தலையாற்றில் 50 ஆயிரம் கன அடி நீர் சென்ற நிலையில், எண்ணூர் சடையங்குப்பம் அருகே 30 அடி ஆற்றின் கரை சேதமடைந்தது. இந்த கரை உடைந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்தது. இதனால், கரை உடைப்பை சரி செய்ய சாலை வழியாக செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே, பக்கிங்காம் கால்வாயில் படகு வழியாக மணல் மூட்டைகள், தடுப்பு கம்புகள் மற்றும் ஊழியர்கள் கொசஸ்தலையாற்றின் ஒரு பகுதிக்கு சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உடைப்பு ஏற்பட்ட கரையில் தடுப்பு, மணல் மூட்டை வைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 அடி தூரம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து கரை அடைப்பை சரி செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

Related Stories: