அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம்: அரசுக்கு பூசாரிகள் நலச்சங்கம் வேண்டுகோள்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு கோயில்  பூசாரிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருமானம் இல்லாத கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறும் வகையில் 13 ஆயிரம் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலம் முழுவதும் ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ள கோயில்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் மட்டுமே அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிய வருகிறது. தமிழகத்தில் துறை கட்டுப்பாட்டில் இல்லா கோயில்களில் விளக்கேற்ற கூட ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ளது. ஒருகால பூஜை திட்டத்தை விரிவுபடுத்த கிராமப்புற தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற இந்த நிதியை ஒதுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோயில்களை அந்தந்த நிர்வாகத்தினர் ஒப்புதலுடன் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த அறநிலையத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: