திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி ரூ.18 லட்சம் மோசடி முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

பீளமேடு: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, ரூ.18 லட்சம் மோசடி செய்த முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோடிபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (30). இவர், கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அங்கு, அவர்  வேலை செய்தபோது காஞ்சிபுரம் மாவட்டம் மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி (27) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டது. அவர்கள் அங்கு திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாக  கூறப்படுகிறது. ஜெயந்தி விவகாரத்து ஆனவர்.

இந்நிலையில், ராகேஷ் கடந்த ஜூலை மாதம் சொந்த ஊர் திரும்பினார். இதேபோல் ஜெயந்தியும் காஞ்சிபுரம் திரும்பினார். இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராகேசுக்கும், மற்றொரு பெண்ணுக்கும்  திருமணம் நடந்தது. இது பற்றிய விவரங்களை ராகேஷ், ஜெயந்திக்கு தெரிவிக்கவில்லை சமீபத்தில், இந்த விவரங்களை ஜெயந்திக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். மேலும்,  இது பற்றிய விவரங்களை தெரிவிப்பதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு  வர சொன்னார்.

இதைத்தொடர்ந்து, ஜெயந்தியும் காஞ்சிபுரத்தில் இருந்து கோவை வந்தார். அப்போது, திருமணம் நடந்தது  குறித்து ராகேசிடம் ஜெயந்தி கேட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயந்தி கூறியதாக  தெரிகிறது. இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முற்றியது. அப்போது, ஜெயந்தி வைத்திருந்த செல்போனை ராகேஷ் பிடுங்கி, அதில் உள்ள சில போட்டோக்கள் மற்றும் தகவல்களை அழித்துவிட்டதாக  கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த ஜெயந்தி, சில தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, விஷம் குடித்தார்.

 ஆனாலும், கோபம் தீராமல், தனது கைப்பையில் தயாராக வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, ராகேஷ் மீது வீசினார். இதில், ராகேசின்  உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ராகேஷ் கோவை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெயந்தி, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜெயந்தி அளித்துள்ள புகாரில், ராகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, என்னிடமிருந்து ரூ.18 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி உள்ளார். ஆசிட் வீச்சு தொடர்பாக ராகேஷ்  தனியாக ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். இவ்விரு மனுக்கள் அடிப்படையில் பீளமேடு போலீசார், இருவர் மீதும் தனித்தனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: