குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்: டெங்கு பரவும் அபாயம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் 2 மாதங்களாக குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு நசியனூர் ரோடு, விவேகானந்தா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆயில் மில், சைசிங் மில் உள்ளிட்ட தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள காலியிடத்தில் கடந்த 2 மாதங்களாக மழைநீர் குளம் போல தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் மழை நீரில் சிக்கிக்கொள்வதோடு, முதியோர்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்களும் செல்ல முடியாததால் தொழிற்சாலையில் இருந்து சரக்குகள் வெளியே கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ஏற்கனவே அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ள அப்பகுதி மக்கள், டெங்கு கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக அப்பகுதி விளங்கி வருவதாகவும், பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பொதுமக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Related Stories: