செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

சென்னை: கன மழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுநேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அங்கு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை சென்னை, செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, செம்மஞ்சேரி, குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கோவிட் தடுப்பூசி முகாம்களை முதலமைச்சர்  பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதல்வர் பார்வையிட்டார்.  அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: