வளி மண்டல காற்று சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழை: கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும்.!

சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி, குமரிக் கடல் பகுதி வரை நீடிப்பதால் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  கடந்த வாரம்  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்று சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நவம்பர் 29ம் தேதி வரை இயல்பைவிட மிக கூடுதலாகவே மழை பெய்துவிட்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை, காற்று சுழற்சி ஆகியவை வலுவிழந்த காரணத்தால்  தமிழகத்தில் நேற்று முதல் மழை பெய்வது குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் 5.8 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல சுழற்சி குமரிக் கடல் பகுதியில் கடலுடன் இணைந்து 1.5 கிமீ உயரம் வரை நீடிப்பதால் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். இந்நிலையில், தெற்கு தாய்லாந்து மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது நேற்று மாலை தெற்கு அந்தமான் பகுதிக்கு நகர்ந்து வந்தது. அதற்கு பிறகு 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 3ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4ம் தேதி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடல் பகுதியை நெருங்கும். அதன் காரணமாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ  வேகத்தில் வீசும். இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசும். இது 4ம் தேதி வரை  மத்திய வங்கக் கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: