கரை புரளும் மழை வெள்ளம்: பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு

திருப்போரூர்: சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இதையொட்டி படூர் கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஓஎம்ஆர். சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் படூர் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் கால்வாய்களை தூர்வாரும் பணி  ஆகியவற்றை பேரிடர் மேலாண்மை குழு சிறப்பு அலுவலர் சமயமூர்த்தி ஐஏஎஸ் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து படூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 367 குடும்பங்கள் வெளியேறி தனியார் ஓட்டல்களில் தங்கினர். இதையறிந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்டனர். அவருடன் கலெக்டர் ராகுல்நாத் திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் ஒன்றிய ஆணையாளர்கள் வெங்கட்ராகவன் பஞ்சு படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஆகியோர் இருந்தனர். மாமல்லபுரம்: கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு  நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி மழையால்  மாமல்லபுரம் அடுத்த எச்சூர் குழிப்பாந்தண்டலம் காரணை பெருமாளேரி  கடம்பாடி மணமை சாவடி பையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் அருவிபோல் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது.

குறிப்பாக குழிப்பாந்தண்டலம்  ஏரியில் வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள விவசாய  நிலங்களில் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. மாமல்லபுரம்  பேரூராட்சி வெண்புருஷம் தேவனேரி பகுதிகளில் தேங்கிய மழைநீரை  திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி காஞ்சிபுரம் மாவட்ட திமுக துணை  செயலாளர் வெ.விஸ்வநாதன் மல்லை நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார் திமுக  நிர்வாகி சண்முகானந்தம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய விசிக செயலாளர் இசிஆர்  அன்பு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொக்லைன்  இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். பேரூராட்சி  துப்புரவு ஆய்வாளர் ரகுபதி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்பட பலர்  உடனிருந்தனர். மாமல்லபுரத்தில் புராதன சின்னமான அர்ச்சுனன் தபசு அருகே 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அர்ச்சுனன் தபசுவை முழுமையாக பார்க்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக அர்ச்சுனன் தபசுவில் சிவன் மகாபாரத்தில் வரும் அர்ச்சுனன் முனிவர்கள் கங்கை நதி யானை சிங்கம் மான் எலி தவம் செய்யும் பூனை உள்பட விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் மாமல்லபுரத்தில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட புராதன சின்னங்கள் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தற்போதைய தொடர் மழையால் அர்ச்சுனன் தபசு பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் முழுமையாக கண்டு ரசிக்க முடியவில்லை என்றனர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற சங்கு தீர்த்த குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. மேலும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஆசிரியர் நகர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரையும் சங்கு தீர்த்த குளத்துக்கான நீர்வரத்து கால்வாய் அடைப்பையும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் சீரமைத்தனர். திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் மூழ்கின.

முதலமைச்சர் பார்வையிட்டார்

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் மண்ணிவாக்கம் ஆதனூர் மலைபட்டு மாகாண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மேற்கண்ட 10கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த கிருஷ்ணா நகர் பரத்வாஜ் நகர் அஷ்டலட்சுமி நகர் புவனேஷ்வரி நகர் குமரன் நகர் ராயப்பா நகர் முல்லை நகர் மகாலட்சுமி நகர் பாலாஜி நகர் பெரியார் நகர் கணேசபுரம் பிடிசி குடியிருப்பு செந்தில் நகர் கஜலட்சுமி நகர் உள்பட 20 க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். ஊரக வளர்ச்சி பொதுபணி ஆகிய துறை அதிகாரிகள் மழைநீர் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை முடிச்சூர் அருகே வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொட்டும் மழையில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட வெள்ள தடுப்பு அலுவலர் அமுதா ஐஏஎஸ் கலெக்டர் ஆர்த்தி எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆகியோர் இருந்தனர்.

Related Stories: