அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழகத்தில் இருப்பது டெல்டா வைரஸ்தான்

சென்னை: தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் இருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசின் தன்மைகளை கண்டறிவதற்கு ஏராளமான அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் தமிழகத்தில் அரசின் சார்பிலும் தனியாரும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 40 லட்சத்து 69,791 கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. இதில், பெரும்பகுதியான பரிசோதனைகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. டி.எம்.எஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில் இதுவரை 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 95 சதவீதத்துக்கும் மேலாக அந்த சோதனைகளின் முடிவில் எல்லா கொரோனா வைரஸும் டெல்டா வைரஸ் என்கின்ற வகையில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

இப்போது, புதிதாக ஒமிக்ரான் என்கிற கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகள் முழு மரபணு பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படி செய்யப்பட்டதிலும் இதுவரை கண்டறியப்பட்டது எல்லாமே டெல்டா வகை வைரஸாகவே இருக்கிறது. உலக சுகாதார மைய அறிவுறுத்தலை, நாம் ஏற்கனவே இங்கே செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை இந்த மரபணு பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் இப்பொழுது உலக சுகாதார மையம் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்களோ அதை  2 மாதமாகவே நாம் செய்து கொண்டு இருக்கிறோம். எனவே, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மாநில அரசுக்கென்று தனியாக முழு மரபணு பரிசோதனை கூடம் உள்ளது என்றார்.

* 4 விமான நிலையங்களுக்கு உதவி திட்ட அலுவலர்கள் நியமனம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘ஏற்கனவே சர்வதேச விமானங்கள் வருகிறபோது  அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கின்ற வகையில் விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலே இருக்கிற நான்கு  சர்வதேச விமான நிலையங்களுக்கும் உதவித் திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். வரும் 2ம் தேதி நானும் துறையின் செயலாளரும், உயர் அதிகாரிகளும் மதுரைக்குச் சென்று அங்கே விமான நிலையத்தை ஆய்வு செய்ய இருக்கிறோம். பின்னர், திருச்சி, கோயம்புத்தூர் போன்ற விமான நிலையங்களை ஒரே நாளில் ஆய்வு செய்து வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகள் எந்தெந்த  வகைகளில் கண்காணிக்கப்படவேண்டும் என்கிற அறிவுறுத்தலை அவர்களுக்கு விடுத்து, எந்த வகையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வர இருக்கிறோம்’ என்றார்.

Related Stories: