பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது: முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியாக இருந்த அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, விழுப்புரத்தில் மரியாதை நிமித்தமாக தன்னை சந்திக்க வந்த பெண் எஸ்பிக்கு காரில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி உள்துறைச் செயலாளர், அப்போதைய டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் விசாரணை நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகிறது.

இதையடுத்து இந்த விசாரணைக்கு தடை கேட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தாக்க செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20ம் தேதி ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பாலியல் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் விழுப்புரம் விசாரணை நீதிமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் ரவீந்தர்பட் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘இந்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, தான் பயணம் மேற்கொண்டபோது குற்றம்சாட்டியுள்ள பெண் போலீஸ் அதிகாரி அவரிடம் லிப்ட் கேட்டு தான் வந்துள்ளார். இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அப்படி இருக்கையில் ஏன் வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூர் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதேபோன்று வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் எந்த காரணமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘வழக்கின் விசாரணையை சென்னைக்காவது மாற்ற வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள் அதுதொடர்பாக நாங்கள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. மனுதாரருக்கு தேவைப்படும் பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கேட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபி தாக்கல் செய்த ரிட் மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: