திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக டிக்கெட்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு தினமும் காலசந்தி, உச்சிகாலம், சாய்ரட்சை என மூன்று கால பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகத்தில்  பங்கேற்க பக்தர்கள், ரூ.1500 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று, கலந்துகொள்ளலாம். அதிகபட்சமாக ஒருகால பூஜைக்கு 1520 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.   இந்நிலையில், கொரோனாவால் கடந்த மார்ச் 10ம் தேதியுடன் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேகங்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், முருகன் கோயிலில் கட்டண அபிஷேகம் செய்வதற்கு இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, 7 மாதங்களுக்கு பின் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் உச்சிகால பூஜைக்கு பக்தர்கள் கட்டண அபிஷேகத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஒரு கால அபிஷேகத்திற்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு இருவர் வீதம் மொத்தம் 10 பக்தர்கள் மட்டும் மூலவருக்கு நடத்தப்படும் பஞ்சாமிர்த அபிஷேகத்தை அமர்ந்து பார்ப்பதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. இந்த கட்டண அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: