ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு மினி லாரியில் கடத்தி வந்த ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: பெண்கள் உள்பட 5 பேர் கைது; ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பொறி வைத்து பிடித்த போலீஸ்

நாமக்கல்: நாமக்கல் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு மினி லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக, நேற்று முன்தினம் நாமக்கல் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உஷாரான போலீசார், நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் அந்த வாகனத்தை மடக்கினர். அதில் இருந்த 340 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

கஞ்சா கடத்தி வந்த குமரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (41), நல்லூரை சேர்ந்த விஜயவீரன் (30), மணியனூரை சேர்ந்த ராணி (32), ஈரோட்டை சேர்ந்த ஆனந்தி (39), ராஜூ (61) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கஞ்சா விற்பனைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மூளையாக செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கஞ்சா வியாபாரிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு, எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், பள்ளிபாளையத்தில் ஒரு கொலை நடந்தது. இந்த கொலை கஞ்சா விற்பனையின் பின்னணயில் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள், வாங்கி வரும் இடம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்காக டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் கஞ்சா, தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி போலீஸ் இன்பார்மர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் இருந்து கஞ்சா வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.5 லட்சத்தை அட்வான்ஸாக பெற்று கொண்ட இன்பார்மர், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வர ஏற்பாடு செய்தார். அதை கண்காணித்து தற்போது 5 பேரை கைது செய்துள்ளோம்.  இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார்.

Related Stories: