தத்து கொடுத்த சிறுமியை திரும்ப கேட்டு தாய் வழக்கு வளர்ப்பு தாயிடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்தியா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்தியா ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர். சத்தியா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. சிவக்குமாருக்கு 3 குழந்தைகள். இதையடுத்து, சகோதரிக்கு தனது மூன்றரை மாத பெண் குழந்தையை சிவகுமார் கடந்த 2012ல் தத்து கொடுத்தார்.சத்தியாவின் கணவர் ரமேஷ் புற்று நோயால் கடந்த 2019ல் இறந்துவிட்டார். இதற்கிடையே தன்னிடமே குழந்தையை ஒப்படைக்க கோரி தாய் சரண்யா அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது பற்றி விசாரித்த குழந்தைகள் நல குழு, சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டது. அதன்படி சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்தியாவும் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள், போலீசாரும், சேலம் குழந்தைகள் நல குழுவும் தங்கள் வரம்பை மீறி இந்த வழக்கில் செயல்பட்டுள்ளனர். சிறுமி அனாதை அல்ல. அவருக்கு இரண்டு தாய்கள் உள்ளனர்.

ஒரு தாயிடம் 10 ஆண்டுகள் வளர்ந்துள்ளார். அவரின் பாதுகாப்பில் இருக்கும் சிறுமியை அப்புறப்படுத்தி காப்பகத்தில் சேர்த்ததை ஏற்க முடியாது. எனவே, சிறுமியை காப்பகத்தில் அடைத்த குழந்தைகள் நல குழுவின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை, சத்தியாவிடமே 10 ஆண்டுக்கும் மேல் வளர்ந்துள்ளது. எனவே, சிறுமியை வளர்ப்புத்தாய் சத்தியாவே வளர்க்க வேண்டும். பெற்ற தாய் மற்றும் தந்தை வாரம் ஒரு முறை சென்று பார்க்கலாம். சிறுமியை காப்பகத்தினர் சந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். சிவகுமாரும், சரண்யாவும் சத்தியாவிடம் இருந்து குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: