தண்ணீர் குளம் ஏரி உபரி நீரை இணைப்பு கால்வாயில் திறந்துவிட திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: பருவமழை காரணமாக திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் ஏரி நிரம்பியது. மேலும் காக்களூர் ஊராட்சி சக்திநகர் பகுதியில்  உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இன்னும் மழைநீர் வெளியேறாததால்  கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மேற்கண்ட பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலநாட்களாக தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் சக்திநகர் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர், தண்ணீர்குளம் ஏரியின் உபரிநீரை மதகு வழியாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாயில் திறந்துவிட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, தண்ணீர்குளம் ஏரியிலிருந்து மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றும் பணி நேற்று நடந்தது. ஆனால் சிறிதளவு உபரிநீர் வெளியேறியதால் சக்திநகர் பகுதியில் தண்ணீர் வடியவில்லை. இதனால் மேலும் உபரிநீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு தண்ணீர்குளம் ஊராட்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் எம்.ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக தீர்வுக்கு பின் தண்ணீர்குளம் ஏரியின் மதகு வழியாக அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: