ஆவின் பால் உற்பத்தி, விநியோகம், பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய் என அனைத்திலும் சாதனைப் படைக்கும் பால்வளத்துறை: அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம்..!

சென்னை: ஆவின் பால் உற்பத்தி, விநியோகம், பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய் என அனைத்திலும் சாதனைப் படைக்கும் பால்வளத்துறை என அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் சார்பில் இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நந்தனம், ஆவின் இல்லம்,  தலைமையிடத்தில் 26.11.2021 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் சேமித்து வைத்து பதப்படுத்தப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்வதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்கள் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தார். 1940 ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் இளங்களை பட்டம் பெற்றார். அமெரிக்காவின் மிக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார். பின்பு 1949 ஆம் வருடம் இந்தியா வந்து குஜராத் அரசு ஆனந்த் பால் பண்ணையில் பொறியாளராக சேர்ந்தார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் கருப்பு இனத்தவர் வெள்ளை இனத்தவர் இடையே நடைபெறும் தாக்குதல்களைக் கண்டு கருப்பு இனத்தவரின் துயரம் துடைத்து ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்.

அது போல இந்தியாவில் பிறந்த டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்கள் பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தில் வெண்மைப்புரட்சி ஏற்படுத்தினார் . இதன் வாயிலாக உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றினார். அமுல் நிறுவனத்தை உருவாக்கியவரும் இவர்தான். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுல் நிறுவனத்தை முன்மாதிரியாக கொண்டதாகும். இவர் உலக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நடுத்தர ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பால்விலை ரூபாய்.3 லிட்டருக்கு குறைத்ததன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

அரசு, பொது துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து தீபாவளி சிறப்பு இனிப்புகளுக்கான மொத்த கொள்முதல் ஆர்டர் பெறப்பட்டதன் மூலம் வரலாற்றின் முதன் முறையாக ரூ.82 கோடி அளவில் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல இன்றைய தினம் பொங்கலுக்கென்று 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் ஆவின் நெய் அடங்கியுள்ளது. இதன் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறார் என்பது உண்மை. 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆவின் நெய் பாட்டில் சென்றடைகிறது என்கிற போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனவே இதனை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவில் 3 ம் இடத்தில் உள்ள ஆவினை முதலாம் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதி எடுத்து அதனை செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று பேசினார். இவ்விழாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப அவர்கள் பேசுகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி ஆவின் பால் விலைக் குறைப்பு முதல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது , சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை , பொங்கல் தொகப்பில் ஆவின் நெய் என அனைத்திலும் ஆவின் நிர்வாகம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப அவர்கள் பேசுகையில் இன்றைய தினம் ஆவின் நிறுவனம் சிறப்புடன் திகழ கூட்டுறவாக செயல்பட விதையை வித்திட்டவர் டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளது. ஆனால் டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இத்தகைய தொழில்நுட்பங்கள் இல்லாமலேயே வெண்மைப்புரட்சியை ஏற்படுதியவர். இந்நாளில் நாம் இரு பெரும் தலைவர்களை நினைவு கூறுவது மிகவும் சிறப்பாகும். 1. அடிமட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை வெண்மை புரட்சியின் மூலம் உலகளவில் உயர்த்திய மாபெரும் மனிதர் டாக்டர். வர்கீஸ் குரியன் அவர்கள்.

2. தமிழகத்தில் ஆவின் என்ற பெயரை உருவாக்கிய மாண்புமிகு மறைந்த நமது முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் என்பதை மறக்கமுடியாது. டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஒன்றியங்கள் மற்றம் 9000 க்கும் மேற்பட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டாக்டர்.வர்கீஸ் குரியன் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பால் பாக்கெட்டுகளில் அவருடைய புகைப்படத்துடன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் சமையல் போட்டி, வினாடி வினா, பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

சமையல் போட்டியில் முதல் பரிசு திருமதி.சுமதி, இரண்டாம் பரிசு செல்வன். மோகேஷ், மூன்றாம் பரிசு செல்வி.அடேலின் ஜெனிபர் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த டெக்னீசியன் திரு.அருள், இரண்டாவது பரிசு விற்பனை பிரிவு துணை மேலாளர் திரு.பாலாஜி , மூன்றாம் பரிசு உ.பொ.மேலாளர் திரு. முகமது இப்ராகிம் பேச்சுப்போட்டியில் சிறப்பு பரிசாக ஜெயஶ்ரீ (6 வயது) , ஜவான் லிகேஷ் (10 வயது), பிரனித் (11 வயது). தமிழகத்திலுள்ள 25 ஒன்றியங்களில் சிறந்த மாவட்ட ஒன்றியமாக சேலம் ஒன்றியமும் இணையத்தின் சிறந்த பால்பண்ணையாக சோழிங்கநல்லூர், 2021 ஆம் ஆண்டு தீபாவளி இனிப்பு உற்பத்தியில் 149 மெ.டன் உற்பத்தி செய்து சாதனை படைத்த அம்பத்தூர் பால் உப பொருள் உற்பத்தி பண்ணை துணை பொது மேலாளர், மாதாந்திர பால் அட்டை விற்பனையில் முதலிடம் பெற்ற திரு.ராஜேந்திரன், அம்பத்தூர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப அவர்கள், ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப அவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் / முதன்மை விழிப்புணர்வு அதிகாரி, ஆவின் திருமதி ஹ.ஜெயலட்சுமி, ஆவின் இணை நிர்வாக இயக்குநர்/ பொது மேலாளர்(நிர்வாகம்) திருமதி கா.பொற்கொடி அவர்கள், பொது மேலாளர்(பால்பதம்), திரு.சி.இராஜேந்திரன் அவர்கள், பொது மேலாளர்(விற்பனை) திரு. R.S.புகழேந்தி அவர்கள் மற்றும் ஆவின் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: