வேலூர் சத்துவாச்சாரி மலையில் உள்ள கப் அண்டு சாசர் தொட்டியில் இருந்து 25 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம்-பைப் லைன் அமைக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

வேலூர் : தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலும் கனமழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியது. அதேசமயம் வேலூர் மாவட்டத்திலும் நீர்நிலைகள் நிரம்பியது. பாலாற்றில் எப்போது இல்லாத அளவிற்கு மழைவெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்டம் முழுவதும் உள்ளூர்களில் இருந்து கிடைக்கும் நீராதாரங்களைக்கொண்டு, குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே சத்துவாச்சாரி மலையில் உள்ள நீர் வீழ்ச்சியில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடி பாலாற்றில் கலக்கிறது. இதனை குடிநீராக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நீர் வீழ்ச்சியில் இருந்து பைப்புகள் மூலம் கப் அண்டு சாசர் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக பைப்புகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் பணியாளர்கள் பைப்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன்மூலம் சத்துவாச்சாரியில் உள்ள 23, 24 வது வார்டில் 25 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் சப்ைள செய்ய முடியும்.

இந்த பணிகள் இன்றைக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். மலையில் இருந்து வரும் தண்ணீர் என்பதால், மின்சார செலவு இன்றி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்ய முடியும். இதனால் மின்சார செலவும் மிச்சமாகும். இதுகுறித்து உதவி கமிஷனர் மதிவாணன் கூறுகையில், ‘‘சத்துவாச்சாரி மலையில் உள்ள கப் அண்டு சாசரில் இருந்து வெளியேறி, கால்வாய்கள் மூலம் பாலாற்றில் வீணாக கலக்கும் மழைநீர், கலெக்டர் உத்தரவின்பேரில், ப்ளீச்சிங் பவுடர் ேபாட்டு தூய்மை செய்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிமூலம் 23, 24வது வார்டில் உள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் சப்ளை செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: