முந்திரி ஆலை தொழிலாளி மரணம் வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கடலூர் எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கை பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில்,  சிபிசிஐடி முறையாக  விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடக்கிறது. புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளார். எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி புதிய விசாரணை அதிகாரி விசாரணையை தொடரலாம். அதை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: