சேலத்தில் வீடுகள் இடிந்து 5 பேர் பலியான இடத்தில் தடயவியல் அதிகாரிகள் 2வது நாளாக சோதனை

சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடுகள் தரைமட்டமான இடத்தில் தடயவியல்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜன்(62). இவரது அண்ணன் ராமகிருஷ்ணன்(65). இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகள் இருந்தது. இதில் 5 வீட்டில் ஒருவீட்டில் கோபி என்பவர் மனைவி இந்திரா, தாய் ராஜலட்சுமி(80), மாமியார் எல்லம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் காலை 6.30 மணியளவில் மூதாட்டி ராஜலட்சுமி, சமையல் அறைக்கு சென்று லைட் போடுவதற்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது வீடு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 5 மாடி வீடு மற்றும் அருகில் இருந்த சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அதிகாரியாக பணியாற்றி வந்த பத்மநாபன்(48) என்பவர் வீடும் இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்தும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 6 குடும்பத்தினரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ராஜலட்சுமி, எல்லம்மா(85), கார்த்திக் ராம்(18), தீயணைப்பு அதிகாரி பத்மநாபன்(48), அவரது மனைவி தேவி(40) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கோபி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் வந்து, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், இரவில் தூங்கச் செல்லும்போது காஸ் அடுப்பை ஆப் செய்யாமல் சென்றிருப்பதும், அதிலிருந்து கசிந்த சமையல் காஸ், வீடு முழுவதும் பரவியிருந்த நிலையில், லைட் சுவிட்சை போட்டவுடன் அதுவெடித்து சிதறியிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில் இறந்துபோன 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் இரவே சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி ஆகியோரது உடல் அவர்களது சொந்த ஊரான ஓமலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்ற 3 பேரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இடிபாடுகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 6 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகி விட்டது. வீட்டில் வசித்து வந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தரைமட்டமான கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை அகற்றினால்தான் காஸ் சிலிண்டர் எப்படி வெடித்தது என்ற முழு விவரம் தெரியவரும். அதே நேரத்தில் வீட்டில் வசித்தவர்கள் முன்னிலையில் இடிபாடுகளை அகற்றி, அவர்களுக்கு சொந்தமான பொருட்களை ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகத்தான் இன்னும் இடிபாடுகளை அகற்றவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

2வது நாளாக தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டினுடைய ஜன்னல்கள், கதவுகள் பெயர்ந்து வந்து தெருவில் கிடக்கிறது. இதனை அவர் எடுத்து ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறார். அந்த கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தி எங்கிருந்து இந்த சிலிண்டர் வெடித்தது என்பதை பார்த்த பிறகு தான் முழு விவரமும் தெரியவரும் என்று அவர் தெரிவித்தார்.

வேலையை அதிகம்  நேசித்த பத்மநாபன்

தீயணைப்பு அதிகாரி பத்மநாபனின் மகன் லோகேஷ் கூறுகையில், காலை 6.30மணிக்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது, டமார் என்ற சத்தம் கேட்டது. பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. என் தந்தை குடும்பத்தை விட வேலையைத்தான் அதிகமாக நேசித்தார். எந்த சம்பவம் நடந்தாலும் உடனடியாக களத்தில் இறங்குவது எனது தந்தை தான். அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என கூறி கண் கலங்கினார்.

தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் நேரில் ஆறுதல்

தமிழ்நாடு தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் விஜய் சேகர் சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று காலை சேலம் வந்தார். அவர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்த பத்மநாபனின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் கண்கலங்கினார். அப்போது அங்கிருந்த பத்மநாபனின் மகன் மற்றும் மகளின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.

பைலட் பத்மநாபன்

இந்த விபத்தில் உயிரிழந்த பத்மநாபனை தீயணைப்பு வீரர்கள் அனைவரும் பைலட் என்றே அழைக்கின்றனர். தீயணைப்பு வீரராக பணியில் சேர்ந்த பத்மநாபன் பின்னர் டிரைவராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 9ம் மாதத்திற்கு முன்பு சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தீ பற்றிய புகார் வந்தவுடன் தீயணைப்பு வண்டியை ஓட்டும் வேகமும் கூட்டத்திற்கு நடுவே செல்லும்போது காட்டும் நிதானமும் அனைவரையும் வியக்க வைக்குமாம். எனவே தான் அவரை ‘பைலட்’ என்று அழைக்கின்றனர்.

நெகிழ வைத்த சிறுமி பூஜாஸ்ரீ

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிரோடு மீட்கப்பட்டவர்களில் 10 வயது சிறுமி பூஜாஸ்ரீயும் ஒருவர். இவரை மீட்டதில் தீயணைப்பு வீரர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இடிபாடுகளுக்குள் தலைகீழாக தொங்கியபடி சிறுமி பூஜாஸ்ரீ அலறிக்கொண்டிருந்தாள். தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் நுழைந்ததும், ‘அண்ணா கால் வலிக்குதுண்ணா’ என்று கனிவோடு  சிறுமி அழைத்துள்ளார். இதனால் நெகிழ்ந்து போன வீரர்கள், சிறுமியை எந்த வித காயமும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் என்று தீவிரம் காட்டியுள்ளனர்.

கான்கிரீட் தளத்திற்குள் சிக்கிக்கொண்ட சிறுமியை ஒவ்வொரு கற்களாக அப்புறப்படுத்தி சம தளத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது சிறுமி, ‘குடிக்க தண்ணீர் வேண்டும் அண்ணா’ என்று கேட்டுள்ளார். உடனடியாக சிறிதளவு தண்ணீரை கொடுத்துள்ளனர். அதோடு பெண் குழந்தை என்பதால் ஒரு துணியை எடுத்துக்கொடுத்து, உடலைமூடி பாதுகாத்து பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். இதற்காக மக்களின் பாராட்டு குவிந்து வருவது பெருமையாக உள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்கள பணியாளராக எங்களை அறிவிக்கணும்...

‘‘எந்த விபத்து நடந்தாலும் முதலில் களம் இறங்குபவர்கள் தீயணைப்பு வீரர்கள்தான். கிணற்றில் அழுகி கிடக்கும் சடலங்களைக் கூட நாங்கள்தான் இறங்கி வெளியே எடுக்கிறோம். கொரோனா ஆரம்ப காலக்கட்டத்தில், ஊரெங்கும் மருந்து தெளித்தது நாங்கள் தான். கிணற்றில் எந்த உயிரினம் விழுந்தாலும் எங்களைத்தான் அழைக்கிறார்கள். நாங்கள் இன்னும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படவில்லை. தீயணைப்பு வீரர் இறந்தால் போலீசாரை போல் எங்களுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. எனவே தீயணைப்பு வீரர்களையும் முன்கள பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்து எங்களை பெருமைப்படுத்த வேண்டும்,’’ என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

Related Stories: