பொதுப்பணித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட கோவை மண்டல தலைமை பொறியாளர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொதுப்பணித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட கோவை மண்டல தலைமை பொறியாளர் பொறுப்பு, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கூடுதலாக ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய 2 பிரிவுகள் உள்ளன. இதில் கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டுதல், நீர்வளப்பிரிவு மூலம் ஏரி, அணைகளை புனரமைத்தல், தடுப்பணை, கதவணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறு சீரமைத்து கோவையை தலைமையிடமாக ஒரு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறை மறுசீரமைப்பு செய்து, கோவையை தலைமையிடமாக கொண்டு கோவை மண்டலம் உருவாக்குவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மண்டல கட்டிட தலைமை பொறியாளரின் கீழ் கோவை, நீலகரி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

கோவை கட்டுமானம், பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளரின் கீழ் கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர் கோட்டங்களும், கோவை (மின்கோட்டம்), சேலம் கட்டுமானம், பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளரின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கோட்டங்களும், கோவை மருத்துவ கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில் சேலம், திருப்பூர் கோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மண்டலத்துக்கு தலைமை பொறியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தற்போது, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: