ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலை மடக்கி பிடித்த போது சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 21ம் தேதி அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, தஞ்சை கல்லணை பகுதியை சேர்ந்த ஆடு திருடும் கும்பலை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ரோந்து பணியில் இருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். அதன்படி தலைமை செயலகத்தில் பூமிநாதனின் மனைவி கவிதாவிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதனின் மகன் குகன்பிரசாத், விரைவில் அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக கூறினார். அப்பா எப்போதும் தைரியமாக இருப்பார் என்றும் எஸ்எஸ்ஐ மகன் கண்ணீர்விட்டார்.

Related Stories: