'தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8,000 மெ.டன் டிஏபி, 10,000 மெ.டன் பொட்டாஷ் தேவை': ஒன்றிய அரசுக்கு வேளாண் அமைச்சர் வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு 8,000 மெ.டன் டிஏபி உரமும், 10,000 மெ.டன் பொட்டாஷ் உரமும் கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு 29,856 மெ.டன் உரத்தை ஒன்றிய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இதேபோல் கங்காவரம், மங்களூர் துறைமுகங்களில் இருந்து 10,700 மெ.டன் ஐ.பி.எல். யூரியாவை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் இருந்து 8,000 மெ.டன், கொரமண்டல் யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60,559 மெ.டன் யூரியா உரமும், 18,245 மெ.டன் டிஏபி உரமும் கையிருப்பில் உள்ளன. மேலும் 28,377 மெ.டன் பொட்டாஷ் உரமும், 1.37 லட்சம் மெ.டன் காம்ப்ளக்ஸ் உரமும் இருப்பில் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து கிருஷ்ணப்பட்டினம், காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து உரங்களை தமிழ்நாட்டுக்கு எடுத்து வர சரக்கு ரயில் ஒதுக்கவும் ஒன்றிய அரசுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. காரைக்கால் துறைமுகத்திற்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளது. உலக அளவில் உரத்தட்டுப்பாடு உள்ளது. அதை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறியிருந்தார்.

Related Stories: