கன மழை காரணமாக மது விற்பனை 40% சரிவு

சென்னை: தமிழகத்தில் கன மழை காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, பீர் வகைகளின் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 4,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ரூ.90 முதல் ரூ.110 கோடி வரையில் நாள்தோறும் விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி மற்றும் வார விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்காக உயரும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை சரிவர திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மதுவிற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘மழை காலம் என்றாலே மதுவிற்பனை சரிவை சந்திக்கும்.ஆனால், இந்தமுறை வழக்கத்தை விட விற்பனை குறைந்துள்ளது. நாள் தோறும் ரூ.5 லட்சம் வரையில் விற்பனை நடைபெறும் கடைகளில் தற்போது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் மட்டுமே மதுவிற்பனையாகிறது. மழை காலம் என்பதால் பீர் வகைகள் 60 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல், கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் மேலும் விற்பனை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related Stories: