குழப்பத்தை தவிர்க்க 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் எண்ணுடன் ஆவணதாரர் பெயர்: கருவி வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவின்போது, டோக்கன் எண்ணுடன் ஆவணதாரரின் பெயரும் காட்டும் வகையில் காட்சி கருவி (டோக்கன் டிஸ்பிளே யூனிட்) வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகங்களில் எந்த தேதியில் பத்திரம் பதிவு செய்ய விரும்புகிறார்களோ அந்த தேதியை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்தால் போதும். இதற்காக, அவர்களுக்கு இணைய வழியாக டோக்கன் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், டோக்கன் எண் அங்குள்ள கருவியில் டிஸ்பிளே ஆகும். அப்போது அந்த எண் உள்ளவர்கள் பத்திரப்பதிவுக்கு அழைக்கப்படுவார்கள்.

ஆனால், தற்போது, காட்சிக்கருவியில் (டோக்கன் டிஸ்பிளே) டோக்கன் எண் மட்டுமே பார்க்க முடிவதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பதிவாகும் நாளில் ஆவணதாரர் தங்களின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஆவணதாரர்களின் பெயரும் காட்டும் வகையில், மேம்படுத்தப்பட்ட காட்சி கருவிகள் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

575 சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக்கருவியில் (token display unit) ஆவணதாரர் பெயரும் காட்சிப்படுத்தப்படும் முறை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, எல்காட் நிறுவனம் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.2.45 கோடிக்கு காட்சி கருவியும் வாங்கப்படுகிறது. இந்த காட்சி கருவியை 4 ஆணடுகள் வரை எல்காட் நிறுவனம் பராமரிக்கிறது. இதற்காக, ரூ.89 லட்சம் தரப்படுகிறது. அதற்கு பிறகு 5 ஆண்டுகளில் 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் அதில் இருந்து தரப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: