29ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில் மம்தா நாளை டெல்லி பயணம்.! பிரதமர் மோடியை சந்திக்கிறார்

கொல்கத்தா: வரும் 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடும் நிலையில், நாளை மேற்குவங்கத்தில் இருந்து இரண்டு நாள் பயணமாக முதல்வர் மம்தா டெல்லி செல்கிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். வருகிற 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், இந்த அமர்வில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான செயல்முறைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஒன்றிய பாஜக அரசை, எதிர்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இறந்ததற்கான காரணத்தை சுட்டிக் காட்டி கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிடுகிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மேற்குவங்கம் - வங்கதேசம் எல்லையில் பி.எஸ்.எப் படையின் அதிகார வரம்பை அதிகரித்த விவகாரம் தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில், ‘மேற்குவங்கம், பஞ்சாப், அசாம் ஆகிய சர்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ தூரத்துக்கு பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது, மாநிலத்தின் உரிமையை பாதிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

Related Stories: