வேலூர் அருகே அன்பூண்டியில் பாலாற்று வெள்ளத்தின் நடுவில் அமைந்த தீவில் 400 ஆடுகளுடன் தங்கியுள்ள 8 பேர்: மீட்புக்குழுவினர் அழைத்தும் வர மறுப்பு

வேலூர்: தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் இதுவரை ஒரு குழந்தை, ராணுவ வீரர் ஒருவர் அடித்து செல்லப்பட்டு, குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் தாலுகா மேல்மொணவூர் அடுத்த அன்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணி, பஞ்சா, முருகன், தருமலிங்கம், பரமேஸ்வரி, சுசீலா, சங்கீதா, சாந்தி ஆகிய 8 பேர், 400 ஆடுகளுடன் தாங்கள் வழக்கமாக ஆடு மேய்க்கும் பாலாற்றின் நடுவில் உள்ள தீவுக்கு சென்றனர். இது வனத்துறை சமூக காடுகளாக பராமரிக்கும் பகுதியாகும். அந்த வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி ஆடுகளை மேய்த்து வந்தனர். 4 நாட்களுக்கு முன்பு ஆடுகளுக்கு கஞ்சி காய்ச்சுவதற்காக அவர்கள் ஆடுகளை அங்கேயே பட்டியில் அடைத்துவிட்டு தங்கள் கிராமத்துக்கு வந்தனர்.

இங்கு கஞ்சி காய்ச்சுவதற்கான அரிசியுடன் 8 பேரும் மீண்டும் சென்றபோது பாலாற்றில் குறைவாக ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தை கடந்து ஆடு மேய்க்கும் இடத்துக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் பாலாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு அந்த தீவை சூழ்ந்தது. வெள்ளம் அதிகரிக்கும் நிலையில் அச்சமடைந்த 8 பேரின் உறவினர்களும் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து இந்த தகவல் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், தாசில்தார் செந்தில், விரிஞ்சிபுரம் ேபாலீசார் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார் செந்தில் நேற்று பாலாற்றில் அவர்கள் தங்கியுள்ள இடத்தை  பார்வையிட்டார். இதையடுத்து வேலூரில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அன்பூண்டியில் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, இங்கிருந்து 400 ஆடுகளுடன் 8 பேர் தவிக்கும் பகுதிக்கு செல்வதற்கு பாலாற்றில் ஓடும் நீரின் வேகம் சிக்கலை தரும் என்பதால் அவர்களை காட்பாடி திருமணி பகுதியில் இருந்து காப்பாற்ற முடிவு செய்தனர். இதையடுத்து காட்பாடி வழியாக திருமணி சென்ற அவர்கள் கயிறு மூலம் அன்பூண்டியை சேர்ந்தவர்களை மீட்க சென்றனர்.

அவர்களிடம், தாங்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆடுகளை மேய்த்துவிட்டு ஆற்றின் வெள்ளம் வடிந்ததும் வீடு திரும்புவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பேசியும் அவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வேலூரில் தாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு திரும்பினர். தீவில் ஆடுகளுடன் தங்கியுள்ளவர்கள் கிராமத்துக்கு திரும்ப மறுத்துவிட்டதால் அவர்களின் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: