அதிமுக ஆட்சியில் வராத டவுன் பஸ்கள்... இப்போ வந்துருச்சு: அமைச்சருக்கு மக்கள் பாராட்டு

சின்னாளபட்டி: அதிமுக ஆட்சியின்போது, என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் வசதி மீண்டும் துவங்கப்ட்டுள்ளது. பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு காலை 8.20 மணியளவில் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்ல டவுன் பஸ் வசதியை, முந்தைய திமுக ஆட்சியின்போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஏற்படுத்தி கொடுத்தார்.

பின்னர் அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு காலை 8.20 மணி பஸ் உள்பட ஒருசில பஸ்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் 8.20 மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், என்.பஞ்சம்பட்டி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், உடனடியாக என்.பஞ்சம்பட்டிக்கு டவுன் பஸ்சை இயக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று பஞ்சம்பட்டிக்கு காலை 8.20க்கு வந்த டவுன் பஸ்சை வரவேற்கும் விதத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீண்டும் டவுன் பஸ் ஏற்படுத்தி தந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக தொண்டரணி அமைப்பாளர் பஞ்சம்பட்டி மணி, ஊராட்சி துணைத்தலைவர் ஜோசப், ஒன்றிய துணைச்செயலாளர் வசந்தா கென்னடி, ஒன்றிய அவைத்தலைவர் வீரையா, பஞ்சம்பட்டி கிளை செயலாளர்கள் தாஸ் வேளாங்கண்ணி, ஜோசப், ராபின் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: