பச்சைமலை பகுதியில் பலத்த மழை; கோனேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது: போக்குவரத்து நிறுத்தம்

பெரம்பலூர்: பச்சைமலையில் பெய்த கன மழையால் கோனேரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப் பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வந்தது. குறிப்பாக மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள பச்சமலை மீது கொட்டிய கன மழையால், பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகும் கல்லாறு, காட்டாறு, கோனேரி ஆறு, மருதையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரும்பாவூர், பூலாம்பாடி லாடபுரம் ஏரிகள் உள்ளிட்ட 52 ஏரிகள் நிரம்பி வழிந்தன.

சின்ன முட்லு, கோரையாறு, மயிலூற்று, அத்தி, இரட்டைப்புறா அருவிகளில் கடந்த 2 வாரங்களாக தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (19ம்தேதி) இரவு லாடபுரம், மேலப்புலியூர் பகுதிகளுக்கு மேலுள்ள பச்சைமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கோனேரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலம்பாடி அருகே, பிரம்மதேசம் அருகேயுள்ள தரை பாலங்களுக்கு மேலே தண்ணீர் அதிகமாக சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரம்மதேசம் பகுதியில் தரை பாலத்துக்குமேல் முழங்கால் மட்டத்திற்கு தண்ணீர் சென்றதால் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் பரவியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயுள்ள தரை பாலத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் உள்ளூர் இளைஞர்கள் பொதுமக்களை நள்ளிரவு முதலே உஷார்படுத்தினர்.

Related Stories: