அரசு பல் மருத்துவமனை கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: அரசு பல் மருத்துவமனை கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் சமீப நாட்களாக தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விடுதியில் தங்கி படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர் நேற்று திடீரென அதிக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அரசு பல் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விடுதியில் தங்கியிருந்த மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனை விடுதி அருகில் உள்ள பாலடைந்த கட்டிடப் பகுதியில் அதிகளவில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் அந்த இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் மருத்துவ மாணவர்களுக்கு விடுதியில் சாப்பிட்ட உணவின் மூலம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து மாணவர்களை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: