ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கும் பணியை வேகப்படுத்த 36 தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கும் பணிகளை வேகப்படுத்த மாவட்ட அளவில் உதவி ஆணையர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் 36 தாசில்தார் பணியிடங்களை உருவாக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து  சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,288 கோயில்கள் உள்ளது.  இக்கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர்  நிலங்கள் உள்ளது. இதில், 1.70 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்க  விடப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது. மற்ற நிலங்கள் எந்தவித பயன்பாடுமின்றி  அப்படியே போடப்பட்டன. இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர்  ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும், சிலர் ஒரு படி மேலே சென்று தங்களது பெயருக்கு  கோயில் நிலங்களை பட்டா மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக   கடந்த ஆட்சி காலத்தில் ஏராளமான புகார்கள் வந்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்  ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள கோயில் நிலங்களை மீட்க முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு உத்தரவிட்டார்.  அதன்பேரில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில்  சொத்துக்்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் நிலங்களை மீட்கும்  நடவடிக்கையை அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முடுக்கி விட்டுள்ளார்.  இதற்காக, ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் தலைமையில் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை, இன்னும் வேகப்படுத்தும் வகையில் அறநிலையத்துறையில் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களில் தலா ஒரு வட்டாட்சியர் பணியிடம்  உட்பட 108 பணியிடங்களை உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்பேரில், தற்போது இந்த பணியிடங்களை உருவாக்கம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:அறநிறுவனங்களுக்கு  சொந்தமான நிலங்கள் தொடர்பான அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட  அளவிலான அலுவலர்களாக உதவி ஆணையர்களை பற்று அலுவலர்களாக நியமனம் செய்து  மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, உதவி ஆணையர்களுடன் இணைந்து வட்டாட்சியர் நிலையிலான ஒரு வருவாய்த்துறையின் அலுவலரை ஈடுபடுத்துவது இப்பணிகளை துரிதமாக  முடிக்க உதவும். இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு வட்டாட்சியர் பணியிடம் 36 வட்டாட்சியர்கள் புதிதாக ஏற்படுத்திடலாம். புதிதாக ஏற்படுத்தப்படும் வட்டாட்சியர் பணியிடங்களை வருவாய்த்தறை மூலமாக அந்தெந்த மாவட்ட அலகில் இருந்து  பணிமாற்றம் மூலம் (அயல்பணி அடிப்படையில்) நியமனம் செய்திடும் வகையில்  உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படும் வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக தலா ஒரு தட்டச்சர் (36 தட்டச்சர்), ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்களும் ஏற்படுத்த ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு அரசு முடிவு  செய்து ஆணையிடுகிறது. இந்த 108 புதிய பணியிடங்களுக்கு நடப்பு நிதியாண்டு முதல் தொடரும் செலவினமாக ஒரு மாத ஊதியம் ரூ.68,23,440 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.8 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 280 நிதி ஒதுக்கீடு  செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: