2014ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசும் 3.11.2021 அன்று பெட்ரோல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.5 மற்றும் டீசல் மீதான ஒன்றிய வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.10 எனவும் குறைத்தது. ஒன்றிய அரசானது மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை மேலும் இதற்கு நிகராக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இது, ஒரு ஏற்றுக்கொள்ள இயலாத கோரிக்கை. ஒன்றிய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு 31.80 ரூபாயாகவும் இருந்தன. இதை, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 27.90 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் ஒன்றிய அரசு தற்போது குறைத்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ.21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்குரூ.17.51 ஆகவும் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஏற்கெனவே பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.3 அளவிற்கு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு 14 ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது. எனவே, ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல. இதனை கருத்தில் கொண்டு, 2014ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: