சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. சில நேரத்தில் கனமழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார். இதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: