பெரம்பலூர், புதுகையில் குளம், வயலில் பிடிபட்ட நட்சத்திர ஆமைகள்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மலையடிவாரத்தில் உள்ள பஞ்சநதி குளம் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். அப்போது அவ்வூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பஞ்சநதி குளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நட்சத்திர ஆமையை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பிறகு செட்டிகுளம் விஏஓ செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் சசிக்குமார் தலைமையில், வனக்காப்பாளர் ரோஜா, வனக்காவலர் சசிக்குமார், வனவர் குமார் ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர். அவர்களிடம் பிடிபட்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு நாரணமங்கலம் காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலத்தில் நேற்று வயல் வெளியில் நட்சத்திர ஆமை இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் விஏவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஏஓ பாலு வந்து ஆமையை பிடித்து மணமேல்கடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஆமை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: