கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு வழங்கினர்

பெரம்பூர்: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு  ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர். முதலில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 69வது வார்டு ஞானாம்பாள் தோட்டம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர். இதையடுத்து, திருவிக நகர் குடியிருப்பு, ராமர் கோயில், மூர்த்தி தெரு, ஜி.கே.எம். காலனி, ராஜாஜி நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தேங்கிய மழைநீர் அரசு இயந்திரங்கள்  மூலம் 2 நாட்களில் அகற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தல்படி 5000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளோம். கேரளா, ஆந்திரா மாநில மக்கள் தமிழக முதலமைச்சர்போல் எங்கள் மாநிலத்திற்கு முதலமைச்சர் கிடைக்கவில்லையே என ஏங்குவதாக என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடும் அளவிற்கு முதலமைச்சரின் பணி சிறப்பாக உள்ளது.

மற்ற மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை அழைத்து வந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றினோம். பல இடங்களில் வெள்ள பாதிப்புகளை சரி செய்துள்ளோம்” என்றார். நிகழ்ச்சியின்போது, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: