லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி: கூகுள் பே மூலம் ₹13 ஆயிரம் அபேஸ்

ஆவடி: லிப்ட் கேட்பது போல் நடித்து, தனியார் கம்பெனி அதிகாரியிடம் பைக், செல்போன், மோதிரம், கூகுள் பே மூலம் ₹13 ஆயிரத்தை, மற்றொரு வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்து விட்டு, தப்பி சென்ற மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னையை அடுத்த குன்றத்தூர், எருமையூர், கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (24). தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் அஜித்குமார், தனது நண்பரை பார்க்க பூந்தமல்லிக்கு பைக்கில் புறப்பட்டார். ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், அஜித்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவர், வாலிபரை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றார்.

சிறிதுதூரம் சென்றவுடன், மேலும் 2 பேர் இவரது பைக்கை வழிமறித்து நிறுத்தினர். அப்போது, லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய வாலிபர் உள்பட 3 பேரும் சேர்ந்து, அஜீத்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர், அஜித்குமாரிடம் இருந்த செல்போன், மோதிரம், பைக் ஆகியவற்றை பறித்தனர். தொடர்ந்து அவர்கள், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர செல்போனில் உள்ள கூகுள்பே மூலம், மற்றொரு வங்கி கணக்கில் ₹13 ஆயிரத்தை பரிவர்த்தனை செய்துவிட்டு, அஜித்குமாரின் பைக்கில் தப்பி சென்றனர். புகாரின்படி ஆவடி இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: