தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதி கோரி சிவசங்கர் பாபா மனு: சிபிசிஐடி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதி கோரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவுக்கு சிபிசிஐடி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இதயநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனுவில், ‘‘இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு 8 நாட்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. அதில் ஒன்று முறையாக பொருத்தப்படாததால் தொடர்ந்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு வருகிறேன். கைதுக்கு பிறகு நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். 73 வயதான தனக்கு நீரிழிவு நோய், கண்பார்வை குறைவு போன்ற பாதிப்புகள் உள்ளன. தொடர் சிகிச்சையால் மட்டுமே தனது வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதால் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நவம்பர் 25ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடி போலீசாருக்கும், புழல் சிறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: