மழையால் விளைச்சல் கடும் பாதிப்பு நாட்டு காய்கறிகளின் விலையும் எகிறியது: கத்தரி ரூ.50, வெண்டை ரூ.70, அவரை ரூ.60க்கு விற்பனை; ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் காய்கறி, செடிகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. உள்ளூரில் விளையக்கூடிய அவரை, கத்தரிக்காய், வெண்டை, முருங்கைக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் பூக்கள் கொட்டி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் காய்கறி விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: ஒரு வாரம் பெய்த மழையால் உள்ளூரில் விளையும் நாட்டுக்காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டு காய்கறிகள் வரத்து கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு வருவது ெவகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைவால் விளையும் அதிகரித்துள்ளது.  கிலோ ரூ.20க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.40, 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் ரூ.15லிருந்து ரூ.70, முருங்கைக்காய் ரூ.40லிருந்து ரூ.80,அவரைக்காய் ரூ.30லிருந்து ரூ.60, பாகற்காய் ரூ.40லிருந்து ரூ.50 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதேபோல பீன்ஸ் ரூ.40லிருந்து ரூ.60,கேரட் ரூ.40லிருந்து ரூ.60, தக்காளி ரூ.10லிருந்து ரூ.70 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

எந்த காய்கறி விலை அதிகரித்தாலும் பீட்ரூட் கிலோ ரூ.20, சவ்சவ் ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.20, சேப்பங்கிழங்கு ரூ.30 என்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனையாகி வருகிறது. மேலும் உருளைக்கிழங்கு ரூ.30லிருந்து ரூ.25, பல்லாரி ரூ.40லிருந்து ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது. இன்று சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சார்பில் திருப்பதி கோவிலுக்கு 10 டன் காய்கறி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். சில்லறை மார்க்கெட்டில் மொத்த மார்க்கெட் விலையை விட கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை ஏரியாவுக்கு தகுந்தார் போல் அதிகமாக விற்கப்படுகிறது. நாட்டுக்காய்கறிகளின் விலை தான் எப்போதும் குறைவாக இருப்பது வழக்கம். மழையால் இதன் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை கவலையடைய செய்துள்ளது.

Related Stories: