மதுரை சிறையில் மருத்துவ பொருள், ஸ்டேஷனரி தயாரிப்பில் அதிமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்கப்பட்டதில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறையில் சிறைக் கைதிகளால் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம்வரை நடந்த இந்த முறைகேட்டில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. அதில், கடலாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவர் நீதிமன்றங்களுக்கு பேப்பர் உறைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் அவ்வாறு பேப்பர் கவர்கள், அட்டைகள் மதுரை மத்திய சிறைக்கு ஆர்டர் தரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.இதேபோல், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு குறைந்த அளவே பொருட்கள் சப்ளை செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக சிறைக் கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிக்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பினேன். எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Related Stories: