மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமனம்: அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இக்கோயில்கள் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என வருவாய் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களில் அறங்காவலரை உதவி ஆணையர் நியமிக்கலாம். 10 ஆயிரத்துக்கு குறையாமல்ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று அறங்காவலர் குழுவை இணை ஆணையர் நியமிக்கலாம்.ரூ.2 லட்சத்துக்கு குறையாமல்ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் வருவாய் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் பேரில் மூன்று அறங்காவலர்கள் கொண்ட குழுவை ஆணையர் நியமிக்கலாம்.ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் வரப்பெறும் கோயில்களில் 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது.

தற்போது, அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ளோரின் பட்டியல் தயாரிக்க மூன்று பேருக்கு குறையாக, ஐந்து பேருக்கு மிகாத அலுவல்சாரா உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. இக்குழு தான் அறங்காவலர் குழுவை நியமனம் செய்வதற்கான தகுதியானோர் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தயாரிக்கிறது. இந்த நிலையில், முதற்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில் உட்பட பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்காக, தகுதியானோரின் பட்டியலை தயார் செய்து அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை தொடர்ந்து, விரைவில் பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

Related Stories: