நாளை முதல் கனமழை கொட்டும் என்பதால் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் உள்பட 3 ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை முதல் வெளுத்து வாங்கும் என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உட்பட 3 ஏரிகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 6ம் தேதி இரவு முதல் கடந்த 11ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக 5 ஏரிகளும் வேகமாக நிரம்பியது. குறிப்பாக, 35 அடி கொள்ளளவு கொண் பூண்டி ஏரியில் 33.97 அடி வரை நீர் இருப்பு உள்ளது. அதாவது 3231 மில்லியன் கன அடியில் 2814 மில்லியன் கன அடி உள்ளது.  18.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 16.86 அடி உள்ளது. 1081 மில்லியன் கன அடியில் 797 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 19.22 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 3300 மில்லியன் கன அடியில் 2856 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.55 கன அடி நீர் இருப்பு உள்ளது. 3645 மில்லியன் கன அடியில் 2999 மில்லியன் கன அடி  நீர் மட்டம் உள்ளது.

ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வருகிறது. வினாடிக்கு 360 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று 36.61 அடி கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில் 36.61 அடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இந்த நிலையில், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நாளை முதல் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஏரிகளின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் 3 அடி வரையும், மற்ற ஏரிகள் 2 அடி வரையும் நீர் இருப்பை குறைத்து வைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

எனவே, புழல் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் 1000 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டன. அதே போன்று செம்பரம்பாக்கத்தில் 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 1000 கன அடியாகவும், பூண்டி ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 7 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. தற்போது, பூண்டி ஏரி 34 அடியாகவும், புழல் ஏரி, 19.20 அடியாகவும், செம்பரம்பாக்கம் 22 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: