செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் முற்றுகை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை: செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமே நடத்த வேண்டும் என்று கோரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர்  ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன. கடந்த மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தற்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரி, இன்று அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 500க்கு மேற்பட்டோர் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து, ஊர்வலமாக புறப்பட்டு, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ‘ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும்.

நேரடியாக தேர்வு நடத்தக் கூடாது என்று கோஷமிட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு மாணவ, மாணவிகள் கோரிக்கை மனுவை கலெக்டர் அனீஷ் சேகரிடம் கொடுத்தனர். இந்த போராட்டம் குறித்து மாணவிகள் கூறுகையில், ‘இதுவரை ஆன்லைனில்தான் படித்து வந்தோம். ஆனால்  செமஸ்டர் ேதர்வுகளை நேரடியாக நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. ஆன்லைனில் சரியாக படிக்க முடியவில்லை.

தற்போதுதான் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே இந்த ஒரு செமஸ்டர் தேர்வை மட்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வை வழக்கம் போல் நேரடியாக நடத்தலாம் என கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: