திருப்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!: சாய ஆலையில் அதிகாரிகள் ஆய்வு..!!

திருப்பூர்: திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் வித்யாலயம் அருகே கொத்துக்காடு தோட்டத்தில் உள்ள தனியார் சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராமகிருஷ்ணன், வடிவேலு மற்றும் நாகராஜ் என்பவர்கள் ஈடுபட்டனர். அப்போது வடிவேலுக்கு மூச்சு திணறியதை அடுத்து நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் மற்றும் எலட்ரிஷியன் ராஜேந்திரன் அவர்களை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.

ஆனால் விஷவாயு தாக்கியதில் வடிவேல் மற்றும் மேலாளர் தினேஷ் உயிரிழந்துவிட்டனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொட்டிக்குள் சிக்கி கொண்டிருந்த மேலும் 3 பேரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். பாதுகாப்பு வசதி எதுவுமின்றி கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு சீல் வைக்க வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஷவாயுவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்று தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கழிவுநீர் தொட்டியில் இறங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாய ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி விசாரணை நடத்தி அது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு பிறகு ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Related Stories: