வரும் காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: வரக்கூடிய காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் கூறியுள்ளார். அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற் பேட்டையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுபடுவதை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று பார்வையிட்டார். பின்னர், திருமழிசை தொழிற் பேட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை 1167 ஏக்கர் பரப்பளவில், 1800 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் 53,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையின் காரணமாக அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் கொரட்டூர் ஏரிக்கு சென்றடைய வேண்டும். கொரட்டூர் ஏரிக்கு செல்ல வேண்டிய வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. இன்றைய ஆய்வில் அம்பத்தூர் ஏரியிலிருந்து  மழையின் காரணமாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் செல்ல கூடிய வடிகால்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது.  

இதனை சீர் செய்தவதற்காக விரைவில் அனைத்து துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வருகின்ற காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரந்தர தீர்வு காணப்படும்  என்றார். அப்போது, தமிழ்நாடு சிட்கோ நிறுவன நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி, அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ கிளைமேலாளார் பாரதி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் துறை செயலாளர் அருன்ராய், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரிஷன் கலந்துகொண்டனர்.

Related Stories: