சின்ன காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்தோத்ரபாதம் பாட அனுமதி கோரி வழக்கு: அறநிலையத்துறை முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயில் பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளில் தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்க கோரிய மனுவை பரிசீலித்து 3 மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரத்தில்  உள்ள வரதராஜ சுவாமி கோயிலின் பிரமோற்சவ விழாவின் 5ம் நாளான மோகினி அலங்கார நிகழ்ச்சியின் போது தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாடுவது பல ஆண்டுகளாக நடந்து வந்ததாகவும்,  இதற்கு  தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி தென்கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்னைக்கு சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா தரப்பில் கோரப்பட்டது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் முடிவு எடுக்க இந்து சமய அறநிலைய சட்டத்தில் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, இப்பிரச்னை தொடர்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்து இரு தரப்பினரையும் அழைத்து அவர்கள் தரும் ஆவணங்களை பரிசீலித்து உரிய விசாரணை நடத்தி 3 மாதங்களில் சட்டத்திற்கு உட்பட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: