தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் வேண்டும்

சென்னை:  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அனுமதி அளித்து, கடந்த 5ம் தேதி கம்பத்தில் உள்ள நீர் ஆதாரத் துறை செயற் பொறியாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வரும் கேரள அரசிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்துறை அமைச்சர், மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், இதுகுறித்த முடிவு அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். தலைமை வனவிலங்கு காப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இது குறித்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, விவாதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் இந்த பிரச்னையில் தலையிட்டு,   கேரள அரசை தட்டிக் கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான கேரள அரசை வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்னை குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். கேரள அரசு, புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது.

Related Stories: