நீர்வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கும் ஆனைக்குட்டம் அணை: விவசாயிகள் கவலை

சிவகாசி: வடகிழக்கு பருவமழை கடந்த ஒருவாரமாக பெய்த நிலையிலும், நீர்வரத்து இல்லாததால் ஆனைக்குட்டம் அணை வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர், திருத்தங்கல் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் ஆதாரம் ஆனைக்குட்டம் அணைதான். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் இந்த அணைக்கு, வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணை நிரம்பி அதன் உபரிநீர் அர்ஜூனா நிதி வழியாக வரும்.

21 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் சுமார் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக அணை முழு அளவில் எட்டியும், ஷட்டர் பழுது காரணமாக தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியேறியது. இநநிலையில் இந்த ஆண்டு அணை நிரம்பும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.

சிவகாசியை சுற்றி கடந்த வாரம் பரவலாக கனமழை பெய்த போதிலும் கிராமங்களில் உள்ள ஊரணிகளுக்கு மட்டும் தண்ணீர் வரத்து இருந்தது. பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. பெரிதும் எதிர்பார்த்த ஆனைக்குட்டம் அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: