19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதார மானியம் விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.805.9 கோடி ஒதுக்கீடு

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதார மானியத்தை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 15-வது நிதிக்குழு 2021-  2026 காலகட்டம் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியமாக வழங்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரையில் வழங்கப்பட்ட மொத்த தொகையில் சுகாதாரத்திற்கான மானியமாக ரூ.70,051 கோடி ஒதுக்கப்பட்டது.

அதில் 43,928 கோடி ரூபாய் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 26,123 கோடி ரூபாய் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் எனவும் சுகாதாரம் தொடர்பான பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகரிக்க பயன்படும் என்றும் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கான சுகாதார மானியமாக 805.9 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: