நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

திருவள்ளூர்: நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில இடங்களில் சாலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் தரைப்பாலம் உடைந்தது. இதனால் இவ்வழியாக பொதுமக்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் இப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் மக்கள், கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில் தொடர் மழையால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், கிருஷ்ணா கால்வாயில் மழைநீர் வரத்து போன்றவைகளால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, ஒதப்பை கிராமத்தில் உள்ள பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் ஒதப்பை, மைலாப்பூர், சீத்தஞ்சேரி, கச்சூர், ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், ஆந்திர மாநிலம், சத்தியவேடு, பிச்சாட்டூர், நாகலாபுரம் வரை செல்லும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது நீர்த்தேக்கத்தில் 33.19 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

நீர்த்தக்கத்தின் முழு கொள்ளவு 3231 மில்லியன் கன அடி. 2595 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 21000 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 18000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கன்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம், சீமாவரம், வெல்லிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர் சடையான்குப்பம், எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: